Monday, March 11, 2013

திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது…?

திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது…?

இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது.

இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது.

தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை நோக்கி நகர்ந்தார்கள். அந்த இலக்கினை அடைவதற்கு சிங்களம் கேட்ட விலை ஈழத் தமிழர்கள் மீதான தனது மேலாதிக்க அங்கீகாரம்.

அந்த வேளையில், இந்திய – இலங்கைக் கூட்டுச் சதிக்குள் தமிழீழம் சிக்கிக்கொண்டதை உணர்ந்துகொண்ட திலீபன், காந்தி தேசத்தை காந்தியின் பாதையில் சென்று அதன் துரோகங்களைத் தடுக்க முனைந்தார்.

* மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

* சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

* அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

* தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று நல்லூர் வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

காந்தி தேசம் தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கும் என்ற திலீபனின் நம்பிக்கை பொய்த்துப் போனது. அன்றைய காங்கிரஸ் அரசால் 26 செப்ரம்பர் 1987 அன்று அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மெல்ல, மெல்லச் சாவினைத் தழுவுவதை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

வரலாறு மன்னிக்க முடியாத அந்தத் தவறினை இழைத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அது முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நீண்டே செல்கின்றது. ஒரு தமிழனின் அகிம்சைப் போர் தோற்கடிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு கால் நூற்றாண்டு கடந்த திலீபனது போராட்டத்தை இன்று லயோலா கல்லூரி மாணவர்கள் மீண்டும் கையேற்றிருக்கிறார்கள்.

இது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான தெளிவான செய்தி.

வைகோ அவர்கள் கூறியது போல், இது கந்தகக் கிடங்கில் வீழ்ந்துள்ள தீப்பொறி. அதனைக் கவனிக்கத் தவறினால், பின்னர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

இப்படி ஒரு தீப்பொறிதான் துனீசியாவின் அதிகார பீடத்தையே புரட்டிப் போட்டது. எகிப்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. லிபியாவின் சர்வாதிகாரம் நொருக்கப்பட்டது. சிரியாவில் இப்போதும் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்திய ஆட்சியாளர்களும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடவும் தவறினால் வரலாறு தீர்ப்பினைத் திருத்தி எழுதிவிடும்.

இந்தத் திலீபன்களது நியாயமான உணர்வினைப் புரிந்து கொள்ளாது, எங்கள் திலீபனைக் கொன்றது போல் நிலை மீண்டும் உருவானால், தமிழக மண்ணில் இனி திலீபன்கள் உருவாக மாட்டார்கள். பிரபாகரன்களே உருவாகுவார்கள். இதனை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சியாளர்கள் தாமாகவே உருவாவதில்லை. அவர்கள் நீதியற்ற ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் உருவாக்கப்படுகின்றார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது.

- இசைப்பிரியா -

No comments:

Post a Comment