கம்ப்யூட்டரை முதன்முதலில் வடிவமைத்தவர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் இப்படியெல்லாம் பயன்படும் என்று அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

அதை ஆரம்பத்தில் பயன்படுத்தியவிதத்தில் இருந்து கற்பனை பண்ண முடியாத தூரத்துக்கு உயர்ந்துவிட்டது. ஆரம்பத்தில் நியூயார்க் நகரத்தில் இருந்த கம்ப்யூட்டரின் முன்னோடி இயந்திரத்தில் இரண்டும் இரண்டும் நான்கு என்று கூட்டி முடிப்பதற்குள் நகரில் வோல்டேஜ் ட்ராப் ஆகிவிடும் என்று கிண்டல் அடிக்கப்பட்டதைப் படித்திருக்கிறேன். கூட்டிச் சொல்லுவதற்கு ஒரு மிஷினா என்றார்கள். அப்போது அதை எதற்கெல்லாம் பயன்படுத்தமுடியும் என அத்தனை உறுதியாகத் தெரியவில்லை. இப்போது அது கடவுள் ஸ்தானத்தில் இருக்கிறது.
அதை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ரஜினியின் 'கோச்சடையான்' படத்தில் நாகேஷை செய்யப் போகிறார்களாம்.
கம்ப்யூட்டரில் வினைல் போர்டுகளுக்கான டிசைன் செய்யும் ஏழுமலை என்பவரை எனக்குத் தெரியும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அந்தத் தொழில் அத்தனை பிரபலம் இல்லை. இங்கே வினைல் போர்டு டிசைன் செய்யப்படும் என்று அவர் முதன் முதலில் ஒரு போர்டை செய்து கடை வாசலில் வைத்தார். அதைப் பார்த்தபடி கடந்து போன மக்களுக்கு வினைல் போர்டு டிசைனை எதற்கெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை.
அந்தப் பக்கத்தில் சாமியானா பந்தலுக்கான சமாசாரங்களை வாடகைவிடும் சரவணன் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனபோது, 'முகப்பேர் முதல்வனே எங்களை விட்டு ஏன் பிரிந்தாய்?' என்ற வாசகத்தோடு அவர் உருவாக்கிய வினைல் போர்டு மிகப் பிரசித்தமானது. அவன் தன் காதல் சோகம் காரணமாகத்தான் இறந்து போனான் என்பது பரவலாகத் தெரிந்திருந்ததால் ஏன் பிரிந்தாய் என்று கேட்டது சந்தேகத் தொனியிலானதாக இல்லை. ஆனால் முகப்பேருக்கு ஒரு முதல்வன் இருக்க முடியுமா என்று பலரையும் யோசிக்க வைத்தது. சரவணனுக்குப் பின்னணியில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை வடிவமைத்திருந்த விதம் சிலருக்கு எச்சில் ஊற வைக்கும்படி செய்தது. ஆனால் அதற்காக உயிரை விடுவதா என்ற குழப்பமும் நீடித்ததால் பொறுமையாக இருந்ததாக இப்போது உணர முடிகிறது.
இந்நிலையில் ஒரு இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு விளம்பர போர்டு வைக்க விரும்பி ஏழுமலையிடம் வந்தார்.
காந்தியும் நேருவும் காங்கிரஸ் மாநாட்டில் பேசிக் கொண்டிருக்கும் புகழ் பெற்ற படத்தை வலைதளத்தில் தேடி எடுத்தார் ஏழுமலை. அதில் நேருவை அகற்றி அந்த இடத்தில் சோனியா காந்தியை அமரச் செய்தார்.
அந்த விளம்பரத்துக்கு 'அன்றைய காந்தியும் இன்றைய காந்தியும்’ என்று ஒரு தலைப்பு கொடுத்தார். பூரித்துப் போன இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் 20 அடிக்கு 40 அடி வாக்கில் பேனர் செய்து பைபாஸ் சாலையில் பிரதானமாக வைத்தார். சாயம் போய் காற்றில் கிழிந்தாடும் வரை அது சாலையில் போவாரின் சாபத்துக்கு ஆளானபடி கிடந்தது. அந்த விளம்பரம் ஒரு வேகமான ஆரம்பத்துக்கு (ஆபத்துக்கு?) வழி வகுத்தது.
கட்சிக்காரர்கள் பலரும் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் முடிச்சு போட்டனர். நிறைய வினைல் போர்டு டிசைன் சென்டர்கள் முளைத்தன.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் டாக்டர் அம்பேத்கரும் வழக்காடும் உடையோடு டேபிளின் எதிர் எதிரே அமர்ந்து விவாதித்துக் கொண்டிருப்பது போலவும், ஸ்டாலின் பிறந்த நாளுக்கு பெரியார் வானத்தில் இருந்து மலர் தூவி வாழ்த்துவது போலவும், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தின் உரிமையாளர் போலவும் பல்வேறு வடிவங்களில் பேனர்கள் தயாராகின.
இறந்துபோனால்தான் வினைல் போர்டு வைக்க முடியும் என்ற கருத்து இதனால் ஒழிந்தது. உயிரோடு இருக்கும் பலரும் தங்கள் படங்களை இப்படி சாலை ஓரங்களில் நட்டு வைத்தனர். தண்டுமாரியம்மன் தீமிதி விழாவுக்கு வாழ்த்துகள்... இப்படிக்கு உங்கள் நண்பன் ஆனந்த் என்று பேனர்கள் வைக்கப்பட்டன. தண்டுமாரியம்மனுக்கு பக்கத்தில் ஆனந்த் தீவிரமாக செல்போன் பேசியபடி கூலிங் கிளாஸ் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.
வைகோவுக்குப் பக்கத்திலும் அழகிரிக்குப் பக்கத்திலும் புலி, சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்குகள் சீறிக்கொண்டிருக்கும் படங்கள் பிரபலமாகி, இப்போது, மணநாள் காணும் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்... முதலாவது பிறந்த நாள் கொண்டாடும் அகிலேஷ் பிறந்த நாளுக்கு வரவேற்கிறோம் போன்ற பேனர்களிலும் சீறும் சிங்கங்கள் இடம்பெறுகின்றன.
மக்களுக்கு கம்ப்யூட்டரைப் போலவே வினைல் போர்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாகவே தெரிந்துவிட்டது.
வினைல் என்பது ஒரு பிளாஸ்டிக். பாலி வினைல் குளோரைடு என்று வேதியியலில் சி, ஹெச் போன்ற எழுத்துகளை இங்கும் அங்கும் சிதறலாக எழுதி சிறு சிறு கோடுகள் போட்டு இணைத்துக் காட்டுவார்கள். சிலர் பிவிசி என்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதன் முதலில் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்தபோதும் கம்ப்யூட்டரின் நிலைமைதான். அதை வைத்து கோல்ஃப் பந்து செய்ய முடியும் என்றார்கள். அப்புறம் ஷூக்களுக்கு ஹீல்ஸ் செய்யலாம் என்று அறிந்தார்கள். நூல்களால் சுற்றப்பட்ட மின் வயர்கள் அடிக்கடி ஷாக் அடிப்பதைத் தவிர்க்க, வயர்களின் மீது பிளாஸ்டிக் பூச்சு கொடுக்கலாம் என்றார்கள். பைகள், பக்கெட்டுகள், நாற்காலி, காற்றாடி, சாலைகள், வீடு போன்றவையெல்லாம் இப்போது பிளாஸ்டிக்கில் செய்கிறார்கள்.
கம்ப்யூட்டரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதிலும், பிளாஸ்டிக்கை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதிலும் நம்மவர்கள் ஏற்படுத்திய புரட்சிதான் அபாரமானது. வினைல் - இது இரண்டும் கலந்த அற்புதம்.
சமீபத்தில் ஒரு வினைல் போர்டில் அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பைப் பார்த்தேன்: ' பிளாஸ்டிக் பொருளைப் பயன்படுத்தாதீர்கள்! '
அட, 'குடி குடியைக் கெடுக்கும்' என்று பிராந்தி பாட்டிலில் எழுதி வைப்பதில்லையா?
No comments:
Post a Comment