Sunday, February 17, 2013

தமிழர்களுக்குள் பிரிவினை...

தமிழர்களுக்குள் பிரிவினை இருந்தால் அரசு இனவழிப்பை இலகுவாக நிறைவேற்றும்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

என்றைக்கு ஒரு தமிழனை அடித்தால் ஒட்டுமொத்த தமிழினமும் கொதிக்கிறதோ அன்றுதான் எங்கள் இனத்தின் விடுதலை சாத்தியப்படும். அதேபோன்று தான் வலி. வடக்கு மக்களுடைய பிரச்சினைகளுக்காக அவர்களே போராடட்டும் என்று விட்டு விடாமல் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு போராட வேண்டும்.

நாம் பிரிந்து நின்றால் இந்த அரசு தனது இன அழிப்பை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து வலி. வடக்கு பிரதேசத்தை விடுவிக்க வலியுறுத்தி நேற்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது இவ்வாறு தெரிவித்த அவர், அங்கு மேலும் கூறுகையில்,

போராட்டம் மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது. போராட்டம் நடைபெறும் சூழலை வைத்தே போராட்டத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும். அந்த வகையில் பாரிய அடக்குமுறைக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டம் பெரும் வெற்றியாகும்.

யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்று யாழ். மாவட்டத்தில் சூழல் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. அந்த நிலையில்தான் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

அடக்குமுறைக்குள் உட்பட்டிருக்கும் மக்கள் அதை தாண்டி, தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருக்கின்றமை. தெளிவான செய்தியொன்றை உலகத்திற்கு கொடுக்கின்றது.

யாழ். மாவட்டத்தில பல வழிகளில் எங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மீள்குடியேற்றப் பிரச்சினை மட்டுமல்லாமல் பல்கலைக்கழக மாணவர்களுடைய பிரச்சினை, காணாமல்போகும் பிரச்சினை என பல கோணங்களில் நாம் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

பாதிக்கப்படும் ஒவ்வொரு தமிழனுடைய போராட்டத்தையும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தங்கள் போராட்டமாக கருத வேண்டும். அவ்வாறு கருதினால் இன்று நடைபெறும் போராட்டங்களை விடவும் மிகப் பெரிய போராட்டம் எதிர்வரும் காலத்தில் நடக்கும்.

வலி. வடக்கு மக்களுடைய பிரச்சினைகளுக்காக அவர்களே போராடட்டும் என்று விட்டு விட்டால் அரசு தனது இன அழிப்பை இலவுவாக நிறைவுக்குக் கொண்டுவிடும். என்றைக்கு ஒரு தமிழனை தொட்டால் ஒட்டுமொத்த தமிழினமும் கொதித்தெழுகிறதோ அன்றுதான் எங்கள் இனத்தின் விடுதலை சாத்தியப்படும்.

வலி. வடக்கு மக்களின் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டுவிட்டு சென்ற பின்னர் தான் போராட்டத்தைக் குழப்ப இராணுவப் புலனாய்வாளர்களால் முயற்சி எடுக்கப்பட்டது.

ரணில் ஒரு சிங்களவர். தமிழர்தான் பிரச்சினை. இதுதான் இராணுவத்தினரின் மனோநிலை. தமிழர்களை நிரந்தர எதிரியாக பார்க்கும் மனோநிலையே அவர்களிடம் இருக்கின்றது என்பதை நாம் உணரவேண்டும்.

அந்த மனோநிலையுடன் ஒரு இராணுவச் சிப்பாய் இங்கிருந்தாலும் எங்கள் நலன்கள் ஒருபோதும் சாத்தியப்படாது என கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

***

உரிமைகளுக்காக போராடாவிட்டால் நாம் அடிமைப்படுத்தப்படுவோம்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

உரிமைகளுக்காக நாம் வீதியில் இறங்கிப் போராடாதவரை நாம் அடிமைப்படுத்தப்படுவோம். எமது அவல வாழ்வும் தொடரும் என்பதை வலி. வடக்கு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதனாலேயே அவர்கள் தாமாகவே முன்வந்து மிகுந்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தமது வாழ்வுரிமைக்கான போராட்டத்தை வெற்றிகரமானதாக நடத்தியிருக்கின்றார்கள் என த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறினார்.

வலி. வடக்கு மக்களை மீள்குடியேற்ற வலியுறுத்தி, மீள்குடியேற்ற அமைப்புக்கள் இணைந்து நடத்திய மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்ட அவர், அங்கு தொடர்ந்து பேசுகையில்,

இப்போராட்டம் இலங்கை அரசாங்கத்திற்கு சரியானதொரு செய்தியினை வழங்கும் என நாம் நினைக்கின்றோம். வழமைபோல் இதையும் இந்த அரசாங்கம் உதாசீனம் செய்யுமாக இருந்தால் மேலும் போராட்டங்கள் தொடரும். அந்தப் போராட்டங்களுக்கு சர்வதேசத்தின் ஆதரவினை வலுவாக நாம் கோருவோம்.

சாத்தியப்பாடற்ற விடயங்களை நாம் கேட்கவில்லை. மிகவும் நாகரீகமான முறையில் எங்களுடைய சொந்த வாழ்விடங்களில் நாம் சென்று வாழும் சூழலை ஏற்படுத்தித் தாருங்கள் என்றே கேட்கின்றோம்.

அதற்காகவே அகிம்சை வழியில், ஜனநாயக ஒழுக்கங்களுக்கமைய இன்று இந்தப்போராட்டங்களை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதைக்கூட இந்த இராணுவத்தினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இங்கு நடைபெற்ற காடைத்தனத்தை நாங்கள் அனைவருமே பார்த்தோம்.

இது இன்று இங்கு மட்டும் நடந்தவொரு விடயமல்ல. அளவெட்டியில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்த நிகழ்வொன்றில் தொடங்கிய காடைத்தனம் இங்குவரை தொடர்கின்றது.

இராணுவம் அவ்வாறு நடந்துகொள்கின்றது என்றால் அவர்களை பாதுகாப்பதற்கே பொலிஸார் முனைகின்றார்கள்.

யாழ்.மாவாட்ட பொலிஸ் அதிகாரி இராணுவத்தினருடன் பேசி எதிர்காலத்தில் இவ்வாறான காடைத்தனங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது இராணுவத்தினரிடமே அதிகாரங்கள் முழுவதும் உள்ளது.

எங்களால் எதுவும் செய்ய முடியாது என்றால் அதை அவர் வெளிப்படையாகவே தெரிவிக்க வேண்டும். வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு என்ற பெயரில் பொலிஸாரை இவ்வாறானா நிகழ்வுகளுக்கு அனுப்ப வேண்டிய தேவை கிடையாது.

வலி.வடக்கு சாதாரணமானதொரு பிரதேசம் கிடையாது. மிக உச்சப்பட்ச வளம் சுரக்கும் ஒரு பிரதேசம், மயிலிட்டி துறைமுகம் இலங்கையில் அதிகளவு கடலுணவு உற்பத்தி செய்யும் ஒரு இடம்.

அதேபோல் வளமான விவசாய நிலத்தையும் பெருமளவில் கொண்டுள்ள ஒரு பகுதியாகும். ஆனால் அந்த நிலத்திற்கும், வளத்திற்கும் சொந்தமான மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்களுடைய நிலத்தில் விவசாயம் செய்து மரக்கறிகளை இராணுவம் மக்களுக்கு விற்கின்றது. இந்நிலையில் விமானத்தளமும், துறைமுகமும் படையினர் அமைக்கப் போவதாக கூறிக்கொண்டிருக்கின்றது.

மக்களுடைய, மக்கள் பிரதிநிதிகளுடயை, பாராளுமன்ற உறுப்பினர்களுடைய அனுமதியில்லாமல் எங்களுடைய நிலத்தில் எவரும் எதுவும் செய்ய முடியாது எங்களுடைய நிலத்திற்கு நாம் திரும்பும் வரை தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.

******

சேதங்களை சீர்செய்வதால் தமிழ் மக்களின் அடிப்படை விடயங்கள் மாறப் போவதில்லை!- அலிஸ்டயார் பேர்ட்
யுத்தத்தின் சேதங்களை சீர்த்திருத்துவதால், அதன் அடிப்படை விடயங்கள் மாறப்போவதில்லை என்று, பிரித்தானியாவின் நாடாளுமன்ற துணை செயலாளர் அலிஸ்டயார் பேர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வெளியுறவுகள் மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இலங்கை தொடர்பில் தமது கருத்தை வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்து சில நாட்களே கடந்துள்ள நிலையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் பாரிய அபிவிருத்திகளை காணக்கூடியதாக இருந்தது.

புதிய பாதைகள் என்பன சீர்த்திருத்தப்பட்டுள்ளன. ஆனால் இதனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக கருத முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

ஆனால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரிவரும் அரசியல் ரீதியான தீர்வும் இன்னும் முன்வைக்கப்படவில்லை என்பதுடன், வடக்கில் முழுமையான நிர்வாக செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்படுவதில் தாமதநிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment